உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் உயர்வுக்கு படி முகாம் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சியில் உயர்வுக்கு படி முகாம் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடக்கும் 'உயர்வுக்கு படி' முகாமில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான 'உயர்வுக்குப் படி' முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில், உயர்வுக்கு படி முகாம் 4 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நாளை 21ம் தேதி இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முகாம் நடக்கிறது. முகாமில் 2022-23, 2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாமல் இதுவரை உயர்கல்வியில் சேராத அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கு பெற கல்வி துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., மற்றும் பாராமெடிக்கல் கல்லுாரிகள் பங்கேற்க செய்ய வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கவும், கல்வி உதவித் தொகை, கல்வி கடன் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்ட முகாமில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ