உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் தென் பெண்ணை ஆற்று தரைப்பாலம் உடைந்து சேதம்

திருக்கோவிலுாரில் தென் பெண்ணை ஆற்று தரைப்பாலம் உடைந்து சேதம்

திருக்கோவிலுார் - அரகண்டநல்லுாரை இணைக்கும் தரைப்பாலம் உடைந்து உள் வாங்கியதால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அரகண்டநல்லுாரையும், திருக்கோவிலுாரையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைபாலம் கட்டப்பட்டது. ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக காமராஜர் ஆட்சி காலத்தில் திருக்கோவிலுாரையும் மணம்பூண்டியையும் இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.ஆனால், இந்த பாலத்தின் வழியாக அரகண்டநல்லுார் செல்ல வேண்டுமானால் 3 கி.மீ., துாரம் வரை சுற்றிச் செல்ல வேண்டும்.அதனால், அரகண்டநல்லுார் செல்ல பொதுமக்கள் தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தரைப் பாலத்தின் மூலம் ஆற்றின் தெற்கு பகுதியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விற்பனை செய்வதற்காக மாட்டு வண்டியிலும், மினி சரக்கு வேனிலும், இரு சக்கர வாகனத்திலும் ஏற்றிச் செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பழுதடைந்து விடும். வெள்ளம் வடிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை தரைபாலத்தை உடனடியாக சீரமைத்து விடும்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் பாலத்தின் நடுவில் விரிசல் ஏற்பட்டு திடீரென உள்வாங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் சேதம் தவிர்க்கப்படடது.பாலம் உடைந்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அரகண்டநல்லுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகளை ஏற்படுத்தினர். இருப்பினும் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.இப்பாலத்தின் அருகே உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியின் போது திட்ட வரைவுகளை தயாரித்து, டெண்டர் விடும் சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !