உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கோரிக்கை

தியாகதுருகத்தில் கேள்விக்குறியாகும் சுகாதாரம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கோரிக்கை

தியாகதுருகம் : தியாகதுருகம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் மேல்பூண்டி தக்கா மற்றும் புக்குளம் ஏரியில் கலப்பதை தடுத்து முறையான வடிகால் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் தெருக்கள் அனைத்தும் குறுகலாக உள்ளதால், கழிவு நீர் கால்வாய்களும் அகலம் குறைவாக உள்ளதால், கழிவு நீரும் எளிதாக வெளியேறுவதில்லை. இதனால், நகரின் பெரும்பகுதி கழிவு நீர் பஸ் நிலையம் அருகில் உள்ள மேல்பூண்டி தக்கா ஏரிக்கு செல்கிறது.அதேபோல் நகரின் மற்றொரு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் புக்குளம் ஏரியில் கலக்கிறது. இதனால் இரு ஏரி நீரும் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி மையமாகி தொற்று நோய் பரவும் அபாயம் நீடிக் கிறது. மேலும், ஏரியிலிருந்து பாசன வசதி பெறும் ஆயக்கட்டு பாசன நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மேல்பூண்டி தக்கா ஏரியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் முட் செடிகள் வளர்ந்து ஆகாயத்தாமரை படர்ந்து ஏரி முழுவதும் காடு போல் காட்சி அளிக்கிறது.நகரில் முறையான கழிவு நீர் கால்வாய் கட்டமைப்பு வசதி இல்லாததும், வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அப்புறப்படுத்த வழியில்லாததும் நகரை சுற்றியுள்ள நீர்நிலைகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், நிலத்தடி நீரும் மாசுபட்டு குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தெருக்கள் அகலம் குறைவாக இருப்பதால் கழிவுநீர் எளிதில் வெளியேறும் வகையில் கால்வாயை அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேபோல் திறந்தவெளி சாக்கடை கால்வாயில் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு தீர்வாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடம் வலுத்து வருகிறது.இதற்கான திட்ட மதிப்பீட்டை உருவாக்கி அரசிடம் உரிய நிதியை பெற்று விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வளர்ந்து வரும் தியாகதுருகம் நகரின் தூய்மையை உறுதி செய்யும் வகையில் கழிவுநீரை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை