கள்ளக்குறிச்சியில் எத்தனால் ஆலை துவங்க கோரிக்கை: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:மாவட்டத்தில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால், வெட்டுக்கூலியை கட்டுப்படுத்த வேண்டும். தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவை தொகையை பெற்று தர வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள், ஆறு மாதங்களில் கரும்பு வெட்ட நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும். விலை வீழ்ச்சி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுபாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு, 50 ரூபாய் வசூலிப்பதை தடுக்க வேண்டும். விலை வீழ்ச்சியால் தர்ப்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும், கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் பெரும்பாலான வயல்வெளி சாலைகள் கரடு முரடாகவும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இதனால், அறுவடை செய்த விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. எனவே, வயல்ெவளி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலையாக சீரமைக்க வேண்டும். ஏரிகளின் நீர் வரத்து மற்றும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். நிவாரணம் தேவை
மாவட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்வதால், எத்தனால் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், 164 பால் உற்பத்தி நிலையங்களில் ரூ.6.25 கோடி விடுவிக்கப்படாமல் உள்ளதை உடன் விடுவிக்க வேண்டும். பெஞ்சல் புயல் நிவாரண தொகை பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. போலி பத்திர பதிவு
மாவட்டத்தில் பத்திரப்பதிவு துறை அலுவலகங்கள் கொள்ளையடிக்கும் கூடாரங்களாக மாறி வருகின்றன. போலி பத்திர பதிவுகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இறுதியாக பேசிய கலெக்டர், விவசாயிகளின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.