பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி; சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு குழு மற்றும் தடகளம் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சின்னசேலம் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கடந்த ஆக., மாதம் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 10ம் தேதி துவங்கியது.இதில் சதுரங்கம், கால்பந்து, இறகுபந்து கைபந்து, எரிபந்து, கோ-கோ, டென்னிஸ், ஹாக்கி, வாலிபால், கபடி, பேஸ்கட்பால், டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னேசலம், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடத்தப்படுகிறது.சின்னசேலம் உள்விளையாட்டு அரங்கில் நடந்த இறகு பந்து போட்டியை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்து மாணவிகளை வாழ்த்தினார். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். தற்போது நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.