-நமது நிருபர்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க., தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக வரும் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று அ.தி.மு.க., கருதுகிறது. இதனால் இக்கட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட் பெற கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க.,வை பொருத்தவரை, 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்ட பின் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான வி.சி., க்கு ஒதுக்கியது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அழகுவேல் பாபு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 249 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வி.சி., வேட்பாளர் பாவரசு 51 ஆயிரத்து 251 ஓட்டுகள் பெற்றார். இத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 தொகுதிகளில் இதுவும் ஒன்று. 2016 தேர்தலில் இத்தொகுதியில் தி.மு.க., நேரடியாக களம் கண்டது. தேர்தல் முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு 90 ஆயிரத்து 108 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் காமராஜ் 86 ஆயிரத்து 4 ஓட்டுகளை பெற்று 4,104 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் காங்., அடம் பிடித்து தி.மு.க., விடமிருந்து கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு பெற்றது. முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்த 643 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் மணிரத்தினம் 84 ஆயிரத்து 752 ஓட்டுக்கள் பெற்றார். தொடர்ந்து 3 முறை கள்ளக்குறிச்சியில் தோல்வியை சந்தித்த தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் உள்ள கருணாகபுரத்தில் விஷ சாராயம் குடித்து 67 பேர் இறந்த சம்பவம் மாவட்டத்தில் ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதேபோல் மாணவி ஒருவர் இறந்தது தொடர்பாக சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டு கலவரமாக மாறிய சம்பவத்தை ஆளும் தி.மு.க., தடுக்க தவறியதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது. இப்பள்ளி அமைந்துள்ள கனியாமூர் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் வருகிறது. இதுவரை 3 முறை இத்தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற முடியாமல் திணறி வரும் நிலையில் விஷ சாராய பலி மற்றும் தனியார் பள்ளி தாக்குதல் சம்பத்தால், வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இச்சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., நேரடியாக களம் காணுவதை தவிர்த்து விட்டு கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக உடன்பிறப்புகள் தகவலை கசிய விட்டுள்ளனர். இதுபோன்ற சிக்கலான தருணத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியை தி.மு.க., கொடுத்தாலும் தவிர்த்து விட்டு வேறு தொகுதியை கேட்டுப் பெற கூட்டணி கட்சித் தலைவர்கள் கருதுவதாக தெரிகிறது. இதனால் கள்ளக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை தி.மு.க., கூட்டணியில் யார் களம் காண்பது என்பது கடைசி வரை குழப்பமாகவே இருக்கும்.