தொடரும் குடிநீர் பிரச்னை: காலி குடங்களுடன் மறியல்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை தாலுகா நைனாகுப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதிய குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மேலும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் சரியாக சுத்தம் செய்யப்படாமல், நீர் மாசடைந்து வருவதால், நோய் தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த கிராம மக்கள், நேற்று காலை 8:30 மணிக்கு சேந்தநாடு- உளுந்தூர்பேட்டை சாலையில், காலி குடங்களுடன் திரண்டு வந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் உறுதியளித்ததால், காலை 9:20 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.