கரடு முரடான வயல்வெளி சாலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் விளை நிலத்திற்கு செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து கரடு, முரடாக இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியைச் சேர்ந்த விவசாயிகள் பலருக்கு பல்லகச்சேரி கிராம எல்லையில் விளைநிலம் உள்ளது. விளைநிலத்திற்கு செல்லும் சாலை முழுதும் சில ஆண்டுகளுக்கு முன் ஜல்லி மற்றும் செம்மண் கொட்டி சமன்படுத்தப்பட்ட நிலையில், தார் சாலை போடாமல் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இந்த சாலை வழியாக அதிகளவு கனரக வாகனங்கள் செல்வதால், சமன்படுத்தப்பட்ட கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் விவசாயிகள் தங்களது பைக்குகளில் விளைநிலத்திற்கு செல்ல முடியாமலும், அறுவடை செய்யப்பட்ட கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை கனரக வாகனங்களில் ஏற்றி வெளியே கொண்டு செல்ல முடியாமலும் அவதியடைகின்றனர். எனவே, கரடு, முரடான வயல்வெளி சாலையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.