எதிர்திசையில் சென்ற வாகனங்களுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் எதிர்திசையில் சென்ற வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், தியாகதுருகம் அருகே புறவழிச்சாலையில் எதிர்திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் நீடிப்பதாக புகார் எழுந்தது. தியாகதுருகம் - உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் வலதுபுறத்தில் சின்னமாம்பட்டு, தியாகை, வேங்கைவாடி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. ஆனால், சாலையின் நடுவே வழித்தடம் ஏற்படுத்தவில்லை. இதனால், பெரியமாம்பட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் 1 கி.மீ., துாரத்தில் உள்ள திம்மலை பகுதி வரை சென்று, புறவழிச்சாலையை குறுக்கே கடக்க வேண்டும். இவ்வாறு செல்வதால் அதிக துாரம் பயணிக்க நேரிடும் என கருதும் வாகன ஓட்டிகள், எளிதாக செல்ல வேண்டும் என்பதற்காக புறவழிச்சாலையில் எதிர் திசையில் பயணிக்கின்றனர். இதனால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் பெரியமாம்பட்டு புறவழிச்சாலையில் சோதனை மேற்கொண்டார். அப்போது, விபத்து ஏற்படும் வகையில் எதிர்திசையில் பயணித்த 2 வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள் எச்சரித்து அனுப்பபட்டனர். அப்போது, போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.