மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் மக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காண, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களை கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், கழிவுநீர் அகற்றும் ஊர்தி அனுமதி மற்றும் செயல்பாடு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து முடிவுற்ற மற்றும் நடக்கும் திட்ட பணிகளின் விவரம், பொதுமக்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு, நிலுவை பணிகள், திட்ட மதிப்பீடு, புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. மேலும், நிலுவை பணிகளை விரைந்து முடிக்கவும், கோடையில் சீரான குடிநீர் வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அரசு வெளியிடும் புதிய திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்கவும், மக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணவும், அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், நகராட்சி கமிஷ்னர்கள் சரவணன், இளவரசன், திவ்யா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.