கனியாமூர் பள்ளி கலவர வழக்கு மாணவியின் தாய், தந்தையிடம் விசாரணை
கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி பள்ளி கலவர வழக்கில் இறந்த மாணவியின் தாய், தந்தையிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.இது தொடர்பாக, அதே ஆண்டு ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, மாணவி இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கும், கலவர வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் மாற்றப்பட்டது.பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 900க்கும் மேற்பட்டோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், கலவரம் நடந்த வழக்கு விசாரணையை, வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜூன் 27ம் தேதி நடந்தது.அப்போது, வாட்ஸ் ஆப் மூலம் கூட்டம் கூட்டிய வி.சி., பிரமுகர் திராவிட மணி, இறந்த மாணவியின் தாய் செல்வி உள்ளிட்டோரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 70க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.அதன்தொடர்ச்சியாக, மாணவியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம் ஆகியோர் நேற்று மாலை 3:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம், டி.எஸ்.பி., அம்மாதுரை, கலவரத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தனித்தனியே 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மாலை 6 மணிக்கு விசாரணை முடிந்து இருவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
பெற்றோர் மீது வழக்கு
கனியாமூர் கலவர வழக்கில் கைதானவர்கள் அளித்த தகவல் மற்றும் பெறப்பட்ட சாட்சியங்களின் பேரில் மாணவியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம் ஆகிய இருவர் மீதும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்களை யூ-டியூப் சேனல்களில் பதிவிட்டு வருகிறார். இதில் உண்மைக்கு புறம்பாக பல தகவல்கள் செல்வி தெரிவிப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.