கள்ளச்சாராய வழக்கின் விசாரணை; சி.பி.ஐ.,க்கு மாற்றத்தால் கலக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19 ம் தேதி விற்பனை செய்த மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள், மெத்தனால் சப்ளை செய்தவர்கள், பதுக்கி வைத்தவர்கள் என நேரடி தொடர்பில் இருந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளச்சாராயம் பாதிப்பு சம்பவத்தில் அரசியல் கட்சியினர், அரசு துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மீதான நடவடிக்கை இல்லை என கூறி சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்றனர். தொடர்ந்து அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், கள்ளச்சாராயம் விற்பனைக்கு உறுதுணையாகவும், மறைமுகமாகவும் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். அதில், சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் விற்பனையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களை மட்டுமே கைது செய்தனர். ஆனால், சி.பி.ஐ., போலீசார் சாராய வியாபாரிகளுடன் மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள், அவர்களிடம் மாதந்தோறும் கையூட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீசார் மட்டுமின்றி, ஊரில் உள்ள அரசியல் கட்சியினர், உள்ளாட்சி பிரநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் யார், யார் சிக்க போகின்றார்களோ என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்தளால், பலரை கலக்கம் அடைய செய்திருக்கிறது.