சித்த மருத்துவ கட்டடம் திறக்க நடவடிக்கை தேவை
சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவமனை திறக்கப்படாமல் உள்ள பூட்டியே கிடக்கிறது.சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிய அறையில் சித்த மருத்துவ பிரிவு இயங்கியது. சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இங்கு, போதிய இட வசதியில்லாததால் சித்த மருத்துவ பிரிவிற்கு புதிய கட்டடம் கட்ட கடந்த 2023ம் ஆண்டு அரசு 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து, கட்டுமான பணிகள் துவங்கி முடிந்தது. ஒரு ஆண்டாகியும் சித்தப்பிரிவு கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, நோயாளிகள் நலன் கருதி விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.