உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை! விதை, திரவ உயிர் உரம் தயாராக உள்ளதாக தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் கரும்பு, மக்காசோளம், மரவள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுகிய கால பயிர்களான உளுந்து, மணிலா, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரி நீர் பாசனம் உள்ளது.குறுகிய கால பணப்பயிரான உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 40 ஆயிரம் எக்டர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் 65 சதவீத மானாவாரி, 35 சதவீதம் இறவையில் உளுந்து பயிரிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக உளுந்துார்பேட்டை, திருநாவலுார், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் மற்றும் தியாகதுருகம் பகுதி விவசாயிகள் அதிகளவில் உளுந்து பயிரிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் பகுதியில் குறைந்தளவு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது.உளுந்து பயிர் மிக குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்டலாம். 75 நாட்கள் அறுவடை காலம் கொண்ட உளுந்து பயிர்களை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். அவை இரண்டரை மாதத்திற்கு பின், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடுகின்றன.மாவட்டத்தின் சராசரி அளவாக 42 ஆயிரத்து 750 டன் அளவில் உளுந்து மகசூல் கிடைக்கிறது. தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி உளுந்து பயிர் சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் கூறுகையில், 'தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி மானாவாரி மற்றும் இறவை நிலங்களில் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்யலாம். குறிப்பாக உளுந்து பயிர்களான வம்பன்-8, வம்பன்-11 ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.இதனை பயிரிடுவதன் மூலம் மண்வளம் மேம்படுவதுடன், மண் அரிப்பை தடுக்கிறது. மண்ணில் தழைச்சத்து நிலைப்படுத்துதல், அங்கக கரிம சேர்ப்பு மூலம் மண்ணின் அமைப்பை மேம்படுத்துதல், கரையாத்தன்மை உடைய சத்துக்களை திரட்டுதல் ஆகியவை இப்பயிர்களின் சிறப்பாகும். உளுந்து பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிரை விதைப்பண்ணை வயலாக பதிவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.சாகுபடிக்கு தேவையான உளுந்து விதைகள், நுண்ணுாட்டம், திரவ உயிர் உரம் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்' என்றார்.