எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி : சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்தது. சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, டி.இ.ஓ.,க்கள் ரேணுகோபால், துரைராஜ் முன்னிலை வகித்தனர். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட 17,522 பேருக்கு, 3 மாத காலத்திற்கு தன்னார்வலர்கள் மூலம் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு, கடந்தாண்டு நவம்பரில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் நாகராஜமுருகன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.