நுாறு நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
உளுந்துார்பேட்டை: நுாறு நாள் வேலை வழங்காததை கண்டித்து திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை வழங்குவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறைட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:45 மணியளவில் திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் கிராம மக்கள் நேற்று மதியம் 12:30 மணியளவில் முற்றுகையை கைவிட்டு பி.டி.ஓ., செந்தில்குமாரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்துவிட்டு சென்றனர்.