சாலையில் பட்டாசு வெடித்த பா.ம.க.வினர் கண்டித்த இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்
உளுந்துார்பேட்டை, ஜூலை 21-உளுந்துார்பேட்டை டோல்கேட் சாலையில் பட்டாசுக வெடித்ததை கண்டித்ததால், போலீசாரிடம் பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க., சார்பில் நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக பா.ம.க..வினர் வாகனங்களில் சென்றனர்.நேற்று காலை 10:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே சென்ற போது பா.ம.க. வினர் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தனர். அதில் ஒருவர் வேன் மேற்கூரை மீது ஏரி நடனம் ஆடினார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் வேன் மீது ஏறி நின்றவரை கீழ இறங்குமாறும், பட்டாசுகளை சாலையில் வெடிக்க வேண்டாம் என கூறினார். இதனால் போலீசாருக்கும், பா.ம.க..வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அசோகன் மற்றும் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பா.ம.க.,வினர் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.