மழை அளவை துல்லியமாக கணக்கிடாமல் தவறான பதிவு வெளியிடும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி
க ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவாகும் மழை அளவை துல்லியமாக கணக்கிடாமல், தவறான மழைப்பதிவு பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், வானாபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய தாலுகாக்களில் 24 இடங்களில் மழை பொழிவை பதிவு செய்ய மழைமானி பொருத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள், வேளாண் அலுவலகங்கள், அணைக்கட்டுகள் போன்ற இடங்களில் மழைமானி அமைக்கப்பட்டு மழை அளவு கணக்கிடப்படுகிறது. ஒரு நாளில் காலை 6:00 மணிக்கு துவங்கி அடுத்த நாள் காலை 6:00 மணி வரை கொண்ட 24 மணி நேரத்தில் பெய்யும் மழையின் அளவை மில்லி மீட்டரில் கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளி க்க வேண்டும். மழை அளவீடு என்பது வானி லை அறிவியலின் முக்கிய அம்சமாகும். அதாவது 0.1- 2.4 மி.மீ., வரை பதிவானால் மிக லேசான மழை என்றும், 2.5 - 15.5 மி.மீ., வரை லேசான மழை, 15.6 - - 64.4 மி.மீ., வரை மிதமான மழை, 64.5- - 115.5 மி.மீ., வரை கனமழை, 115.6- - 204.4 மி.மீ., வரை மிக கனமழை, 204.5 மி.மீ., க்கு மேல் மிக அதி கனமழை என்று கணக்கிடப்படுகிறது. மழை பதிவு கணக்குகளோடு, மழையால் ஏற்படும் உயிரிழப்புக்கள், வீடு சேதம் அடைதல், கால்நடைகள் உயிரிழத்தல் மரங்கள் சாய்தல் உள்ளிட்ட தரவுகளும் தொகுத்து பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உயிர் சேதம், பயிர் சேதம், கால்நடை உயிரிழத் தலுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. சமீபகாலமாக மாவட்டத்தில் பெய்யும் மழையை முறையாக பதிவு செய்து சரியான தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 30ம் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதில் ரிஷிவந்தியத்தில் இரவு 7.55 மணி முதல் 8.40 வரை முக்கால் ம ணி நேரம் கன மழை கொட்டியது. ஆனால் நேற்று முன்தினம் 31ம் தேதி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட மழை பதிவு பட்டியலில் ரிஷிவந்தியத்தில் 'பூஜ்ஜியம்' அளவு மழை பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற தவறான புள்ளிவிபர தகவலை ஆய்வு செய்யாமல் மாவட்ட நிர்வாகம் அப்படியே பட்டியலை வெளியிடுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் பெய்யும் மழையை கணக்கீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் இதனை கண்டு கொள்வதில்லை. இதனால் தவறான மழைப்பொழிவு பட்டியல் பதிவு செய்யப்படுகிறது. இது, மாவட்டத்தின் ஆண்டு மழைப்பொழிவு சதவீதத்தில் பெரும் மாற்றத்தை தவறுதலாக ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இனியாவது மழைமானி பொருத்தப்பட்டுள்ள இடத்தில் மழை பதிவை துல்லியமாக கணக்கிட்டு மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பவும் அதனை மறு ஆய்வு செய்து சரியான பட்டியலை வெளியிடவும் கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.