கள்ளக்குறிச்சியில் போக்குவரத்தை சீரமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி : குளத்து மேட்டுத் தெருவில் வாகனங்களின் அணிவகுப்பால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்பால் குறுகிக்கிடந்த குளத்து மேட்டுத் தெருவில் தினமலர் செய்தி எதிரொலியால் கடந்தாண்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தெருவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களின் அணிவகுப்பால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. காய்கறி மார்க்கெட்டை ஒட்டியபடி உள்ள இந்த தெருவில் லோடு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அத்துடன் இப்பகுதி வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் வரிசையாக வாகனங்களை நிறுத்தி விடுவதால் அவ்வழியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே குளத்து மேட்டு தெருவில் வாகன அணிவகுப்பினை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.