நிறைவேற்றாத வாக்குறுதியால் மக்கள் அதிருப்தி; அவசரமாக கணக்கெடுக்கும் ஆளும் கட்சியினர்
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் ஆளுங்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தாத திட்டங்கள், மக்கள் பிரச்னைகள், வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்ய துவங்கி விட்டனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் கிராமங்களில் பிரசாரம் செய்ய சென்ற தி.மு.க., வேட்பாளர்கள் கூறிய பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களான சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோர் ஆளுங்கட்சியான பின்பும் அவர்கள் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் தொகுதியில் உள்ள பொது பிரச்னைகளை ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளாததால், 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் சிலர் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்நிலையில் மக்களின் அதிருப்தியை சரிகட்ட நீண்ட நாள் கோரிக்கை மற்றும் கடந்த தேர்தலில் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கான முனைப்பில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் களம் இறங்கியுள்ளனர். நிறைவேற்றப்படாத நீண்ட நாள் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை கட்சியினர் மூலம் துவக்கி உள்ளனர். அதேபோல் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு சாத்தியம் உள்ளவற்றை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த முயற்சி தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆளுங்கட்சி நம்புகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் ஊருக்குள் வரும்போது பேசிக்கொள்ளலாம் என்று பொதுமக்கள் மவுனமாக காத்திருக்கின்றனர்.