தேர்வு முடிவை வெளியிட வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மனு அளிப்பு
கள்ளக்குறிச்சி; கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமன தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி சிலர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர், பதாகையுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் படி 6,553 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால், கடந்த ஜூலை 21ம் தேதி 2,768 காலி பணியிடங்களுக்கு மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு நடந்தது. இந்த தேர்வினை எழுதி 5 மாதங்களுக்கு மேலாகியும், உத்தேச விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.குறிப்பாக, கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பபடாமல் இருப்பதால், 12 வருடங்களாக அரசு பணி கிடைக்காமல் சிரமமடைந்து வருகிறோம். இதனால், பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். எனவே, கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்வுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிடுவதுடன், முழு காலி பணியிடத்தையும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.