கோடை பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் கோடை வெயிலில் பொதுமக்கள் கவனமாக இருக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: கோடைவெயில் கால துவக்கத்திலேயே வெப்ப அளவு அதிகம் உள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர்கள் இளநீர், பழ ரசங்களை திரவ வடிவில் அருந்த வேண்டும். தனியே வசிக்கும் முதியவர்கள் உடல்நிலையை தினமும் இருமுறை சரி பார்த்து கொள்ள வேண்டும். அவர்களின் அருகில், தொலைபேசி உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டி, போதிய தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை, பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.