நுாரோலையில் நாளை டாஸ்மாக் கடை மூடல்
கள்ளக்குறிச்சி; நுாரோலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நாளை 28ம் தேதி மூடக்கோரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராம எல்லையில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 28ம் தேதி நடைபெற உள்ள முப்பூசை விழாவில் நுாரோலை, சேரந்தாங்கல் ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்துகின்றனர்.கோவிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை உள்ளது. மதுபாட்டில் வாங்க வருபவர்கள், சாலையிலேயே நின்று மது அருந்தி, தகாத வார்த்தைகளால் பேசுவதால், தகராறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.எனவே, 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் நுாரோலை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, சில தினங்களுக்கு முன் மனு அளித்தனர்.மனு குறித்து விசாரித்த கலெக்டர் பிரசாந்த், சட்டம், ஒழுங்கு கருத்தில் கொண்டு நாளை 28ம் தேதி ஒரு நாள் மட்டும் நுாரோலை டாஸ்மாக் கடையை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.