உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கைப்பிள்ளையான கள்ளக்குறிச்சி உடன்பிறப்புகள் புலம்பல்

கைப்பிள்ளையான கள்ளக்குறிச்சி உடன்பிறப்புகள் புலம்பல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மந்திரி சபை பட்டியலில் வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பது கட்சித் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மந்திரி சபையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இதுவரை இடம் தரவில்லை. ஆட்சி அமைந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பொன்முடி நியமிக்கப்பட்டார்.அதன் பின் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் பொன்முடியோடு ஒத்துப் போகாததால் சில மாதங்களிலேயே வேலு பொறுப்பு அமைச்சரானார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 4 முறை மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் கடந்த 2022ம் ஆண்டு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததும் தற்போது துணை முதல்வர் கொடுத்ததும் முக்கிய மந்திரி சபை மாற்றமாக கருதப்படுகிறது.எப்படியாவது மந்திரி சபையில் இடம் பிடிக்க வேண்டும் என வசந்தம் கார்த்திகேயனும், உதயசூரியனும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால், கட்சித் தலைமையில் அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் செல்வாக்குடன் இருப்பதால் முட்டுக்கட்டை போடுவதாக வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.பொன்முடி மகன் கவுதம சிகாமணி மீண்டும் கள்ளக்குறிச்சியில் லோக்சபா தேர்தலில் 'சீட்' பெற்று விடக்கூடாது என்பதில் வசந்தம் கார்த்திகேயன் உறுதியாக இருந்தார். இது, அவர் மீது பொன்முடிக்கு மனக்கசப்பை உருவாக்கியது.மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் காரணமாக கூட தற்போதைய மந்திரி சபை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடைசி வரை சீனியர் மந்திரிகளின் கைப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ