மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நாளை துவக்கம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நாளை 28ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் மூன்றாம் கட்டமாக விளிம்பு நிலையிலுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நாளை (28ம் தேதி) துவங்குகிறது.நாளை உளுந்துார்பேட்டை தொகுதி திருநாவலுார் வட்டாரம், மதியனுார் காலனி வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில், களத்துார் காலனி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, திருநாவலுார் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன மாரனோடை ஊராட்சி ஆர்.சி.பள்ளி, பெரிய மாரனோடை, சின்னக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முகாம்கள் நடக்கிறது.அதேபோல் 29ம் தேதி உளுந்துார்பேட்டை தாலுகா பழங்குணம் காலனி மாரியம்மன் கோவில், பரிந்தல் ஊராட்சி பரிந்தல் மேட்டுக்காலனி பள்ளி, ஏ.சாத்தனுார் ஊராட்சி அலுவலகம் அருகே விளையாட்டு மைதானம், பாலி காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, திருநாவலுார் வட்டாரம், செங்குறிச்சி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம்கள் நடக்கிறது.வரும் 30ம் தேதி சங்கராபுரம் தொகுதி கல்வராயன்மலை தாலுகா, கொட்டப்புத்துார் ஜி.டி.ஆர்., அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, முண்டியூர் அரசு ஆரம்ப மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளியில் நடக்கிறது.ஈச்சங்காடு ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் மாரியம்மன் கோவில் அருகே, ஆரம்பூண்டி ஊராட்சி கிராம ஊராட்சி அலுவலகம் எதிர்புறம், சின்ன பலாப்பூண்டி அரசு ஆரம்ப மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி அருகிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம்.