உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளியூர் சென்றோர் பொங்கல் பரிசு கிடைக்காமல் ஏமாற்றம்! தாமதமாக சொந்த ஊருக்கு திரும்பியதால் சிக்கல்

வெளியூர் சென்றோர் பொங்கல் பரிசு கிடைக்காமல் ஏமாற்றம்! தாமதமாக சொந்த ஊருக்கு திரும்பியதால் சிக்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளியூரில் இருந்து தாமதமாக வந்த சிலருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை பொதுமக்கள் கொண்டாடி மகிழும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கமும் தமிழக அரசு வழங்கி வருகிறது.நடப்பாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 பணம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.முதற்கட்டமாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு பரிசு பொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அனைவருக்கும் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க கூட்டுறவு துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டது. ரேஷன் கடையில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 7 முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் டோக்கன் வழங்கப்பட்டது.தொடர்ந்து, கடந்த 10ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் ஸ்மார்ட் கார்டினை பி.ஓ.எஸ்., கருவியில் வைத்து ஸ்கேன் செய்து பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கட்டாயம் விரல்ரேகை வைத்து வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாலான கிராமப்புறங்களை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பினையும் தொழிலாக செய்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையிலான தொழில் நிறுவனங்கள் இல்லை.இதனால் பெரும்பாலானோர் சென்னை, கோயம்புத்துார், திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்கி பணிபுரிகின்றனர். பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளி பகுதியில் வசிக்கும் அனைவரும் சொந்த ஊருக்கு வர தொடங்கினர்.பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால், சிலர் ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டது. அவ்வாறு தாமதமாக வந்தவர்களுக்கு கடந்த 15ம் தேதியில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டபோது, கடந்த 14ம் தேதியுடன் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கி முடிக்கப்பட்டது எனவும், அன்றைய தினம் வாங்காதவர்களின் எண்ணிக்கை மற்றும் தொகையை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம் எனவும் ரேஷன் விற்பனையாளர்கள் தரப்பினர் தெரிவித்தனர்.இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறி, பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காத மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை