சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்l ரூ.37 ஆயிரம் அபராதம் விதிப்பு போக்குவரத்து போலீஸ் அதிரடி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சாலை விதிகளை மீறி நகர் மேம்பாலம் வழியாக சென்ற 14 வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் ரூ. 37 ஆயிரம் அபராதம் விதித்தனர்.உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இருந்து நகர் மேம்பாலம் வழியாக உளுந்தூர்பேட்டைக்குள் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதனால் டோல்கேட் அருகே சேந்தநாடு சாலை, சென்னை சாலை, சேலம் சாலை, உளுந்துார்பேட்டை சாலைகள் சந்திக்கும் பகுதி நடுவே வாகனங்கள் உள்ளே செல்லாதபடி, தடுப்பு கட்டைகள், பேரிக்காடுகள் அமைத்தனர்.இதனால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் டோல்கேட்டில் இருந்து விருத்தாசலம் சாலை வழியாக உளுநதுார்பேட்டை பஸ் நிலையத்திற்குள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் டோல்கேட் பகுதியில் இருந்து சாலை சந்திப்பு மற்றும் நகர் மேம்பாலம் வழியாக உளுந்துார்பேட்டைக்குள் செல்லத் தொடங்கின. இதை அறிந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலான போலீசார் நேற்று 6:00 மணிக்கு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சாலை போக்குவரத்து மீறி உளுந்துார்பேட்டை பகுதிக்குள் சென்ற தனியார் பஸ்சை விரட்டி சென்று பிடித்து, ரூ. 3500 அபராதம் விதித்தனர். இதேபோல், டோல்கேட் சாலை சந்திப்பு மற்றும் நகர் மேம்பாலம் வழியாக உளுந்துார்பேட்டைக்குள் சென்ற பஸ் லாரி உள்ளிட்டவைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 2 தனியார் பஸ்கள், 10 அரசு பஸ்கள், 2 லாரிகளுக்கு மொத்தம் ரூ. 37 ஆயிரம் அபராதம் விதித்தனர்.