இணை மின் உற்பத்தி நிலையம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது? 15 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இணை மின் உற்பத்தி நிலைய திட்ட பணிகளைமீண்டும் துவங்கி, அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சிராயபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு ஆகியவைகளை பிரதானமாக சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில் கரும்பு சாகுபடி அதிகரித்ததால் கடந்த, 1997 ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில், கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2, துவங்கப்பட்டது. இந்த ஆலை, நாள் ஒன்றிற்கு, 2500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது. மின் பற்றாக்குறையை போக்கவும், விவசாயிகள் பயனடையும் வகையிலும், மாநிலத்தில் உள்ள, 10 கூட்டுறவு மற்றும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை, நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ், 12 முதல், 18 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. பணிகள் துவக்கம்
அதன்படி, கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 ல், கடந்த, 2010 ம் ஆண்டு, ஜூன் மாதம், 5 ம் தேதி ரூ.78.49 கோடி மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த இணை மின் உற்பத்தி நிலையம் மூலம், நாள்தோறும், 15 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், ஆலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள, 10 மெகா வாட் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது. இந்த மின் உற்பத்திக்காக, திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளின்தொகையிலும் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் உற்பத்தி மின்சாரம் சடையம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வினியோகிக்கவும், திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் தொடர்ந்து நடந்த, ஆட்சி மாற்றத்தால் மின் உற்பத்தி திட்ட பணிகளுக்கு முறையாக நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் துவங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த, 2018 ம் ஆண்டு மின் உற்பத்தி நிலைய பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன. இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த அப்போதைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், விரைவில் மின் உற்பத்தி நிலையம் செயல்பட துவங்கும் என உறுதி அளித்தனர். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.கடந்த, 2010 ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள், 15 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை முடிவடையவில்லை. பல ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் உள்ளதால், பெரும் பகுதி தளவாட பொருட்கள் அதிகளவில் துருப்பிடித்து காணப்படுகின்றன. இதனால் அதன் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' அரசு ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாய் விரையமானது மட்டுமின்றி, விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணமும் பயனற்று போய் உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.கிடப்பில் போடப்பட்ட மின் உற்பத்தி நிலைய பணிகளை மீண்டும் துவங்கி, அதனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.