உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ்களுக்கான தகுதி சான்று பிரிவு... அமைக்கப்படுமா?: கள்ளக்குறிச்சியில் நடவடிக்கை தேவை

அரசு பஸ்களுக்கான தகுதி சான்று பிரிவு... அமைக்கப்படுமா?: கள்ளக்குறிச்சியில் நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்களை புதுப்பிக்க போக்குவரத்து கழக தகுதி சான்று பிரிவு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி என மொத்தம் 6 இடங்களில் அரசு டெப்போக்கள் இயங்கி வருகிறது. அனைத்து டெப்போக்களில் இருந்தும் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வகையில் 250க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பழைய பஸ்கள் அனைத்தும் ஆண்டிற்கு ஒரு முறையும், புதிய பஸ்கள் அனைத்தும் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையும் புதுப்பித்து, சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கான தகுதி சான்று பிரிவு உளுந்துார்பேட்டையில் இயங்கி வருகிறது. பஸ்சில் ஏற்படும் சிறிய பழுதுகளை அந்தந்த டெப்போக்களிலேயே சரிசெய்து விடலாம். ஆனால், பெரிய அளவிலான பழுது மற்றும் பெயிண்ட் அடிக்க வேண்டுமெனில் உளுந்துார்பேட்டையில் உள்ள தகுதி சான்று பிரிவுக்குதான் செல்ல வேண்டும். இங்கு, பழுது நீக்க பணிகள் முடிந்ததும், வெள்ளையூரில் உள்ள ஆர்.டி.ஓ ., அலுவலகத்திற்கு பஸ்கள் கொண்டு செல்லப்படும். அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர், பஸ்சை பரிசோதனை செய்து, தகுதிச்சான்று வழங்குவார். அதன்பிறகு பஸ்கள் அனைத்தும் அந்தந்த டெப்போக்களுக்கு ஓட்டி செல்லப்படும். இதில், சின்னசேலம் டெப்போ பஸ்கள் உளுந்துார்பேட்டைக்கு சென்று வர 126 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். அதே போன்று, சங்கராபுரம் டெப்போ பஸ்கள் 132 கி.மீ., துாரம், கள்ளக்குறிச்சி டெப்போ பஸ்கள் 96 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் டீசல் விரயமாகி போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் டோல்கேட் இருப்பதால் பஸ்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு சில பஸ்கள் சுங்க கட்டணத்தை தவிர்க்க கிராமங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இதை தவிர்க்க, கள்ளக்குறிச்சியில் வாகன தகுதி சான்று பிரிவு அமைப்பதன் மூலம், டீசல் செலவை கட்டுப்படுத்தலாம். சுங்க கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ்களை கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலேயே சோதனைக்கு உட்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கான செலவு குறையும். எனவே, கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்து கழக தகுதி சான்று பிரிவு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ