மகளிர் திட்ட செயல்பாடுகள் : அலுவலர்களுடன் ஆலோசனை
கள்ளக்குறிச்சி : மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் ஆடு, மாடு, கோழி, காடை வளர்ப்பு போன்ற பண்ணை செயல்பாடுகள் குறித்தும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கல்லுாரி களில் உணவு கூடம் அமைத்தல், அரசு மருத்துவமனைகளில் சிறுதானிய உணவகம் அமைத்தல், மசாலா தொகுப்பு போன்ற பண்ணை சாரா திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு அரசு விதிமுறைக்குட்பட்டு முறையாக தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுத்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.பின், சென்னையில் நடந்த மாநில அளவிலான பன்முக கலாசார போட்டியில் கபடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டியில் பரிசு பெற்ற க.செல்லம்பட்டு, சித்தப்பட்டினம் ஊராட்சி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் துணை முதல்வர் வழங்கிய விருதுகள் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.