இளைஞர் திறன் திருவிழா
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சி அளிக்கும் அரசு துறைகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இத்திருவிழாவை நடத்துகிறது. அதாவது, அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை பற்றி தெரிந்து கொண்டு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில், 18 பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன.மாவட்டத்தில், 8ம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 2,361 இளைஞர்கள் நேற்று இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற்றனர். இதில் 149 பேர் தங்களுக்கு பிடித்த திறன் பயிற்சியில் சேர்ந்தனர்.பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை, பயிற்சி வழங்கிய நிறுவனமே ஏற்பாடு செய்யும்.மேலும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையிலான அரசு சார்ந்த திட்டங்கள் குறித்த விபரங்களும் வைக்கப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.