உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேம்பாலப்பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம்

மேம்பாலப்பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம்

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், ஒரகடம் மேம்பாலப் பணி, மந்தமாக நடைபெற்று வருகிறது.ஸ்ரீபெரும்புதூர் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை சாலையும், வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையும் இணையும் நான்கு முனை சந்திப்பாக, ஒரகடம் கிராமம் அமைந்துள்ளது. ஒரகடம் நான்கு முனை சந்திப்பு பகுதியில், வாகனங்கள், குறுக்கும் நெடுக்குமாக கடப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் - சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் சாலைகள் நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி முடியும் நிலையில் உள்ளது.

ஒரகடம் நான்கு முனை சந்திப்பில் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையை இணைக்கும் மேம்பாலம் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சி கழகம் சார்பில், கடந்தாண்டு மார்ச் மாதம், மேம்பாலப்பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கியது. மேம்பாலம் 5.8 மீட்டர் உயரம், 24.2 மீட்டர் அகலம், 687 மீட்டர் நீளம் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. பணிகள், வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடைய வேண்டும். ஆனால், இதுவரை 45 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மேம்பாலம் கட்டும் பணிக்கான நிலம் கையகப்படுத்தி தருவதில், வருவாய்த்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் பாலப்பணி மந்தகதியில் நடந்து வருகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளரிடம் கேட்டபோது,''மேம்பாலம் கட்டும் பணிக்காக, வருவாய்த் துறையினர் நிலம் கையகப்படுத்தி, நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தற்போது, இந்த பாதையில் உள்ள உயர் மின்னழுத்த ஒயரும், பாலாற்று கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களும், வேறு பாதையில் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. வாலாஜாபாத் - வண்டலூர் சாலை 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது . இச்சாலையில், சர்வீஸ் சாலை அமைத்த பின் தான், மேம்பாலம் கட்டும் பணி தொடரும்,'' என, தெரிவித்தார்.

''மேம்பாலம் கட்டுவதற்கான, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆவணங்களை சேகரித்து, நில நிர்வாக துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த துறையிடம் அனுமதி கிடைத்தப் பின், நிலங்கள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின், மேம்பாலம் கட்டும் பணி தொடரும்,'' என, நில எடுப்பு தாசில்தார் நாராயணசாமி தெரிவித்தார். இக்கிராமத்தை சுற்றி மாத்தூர், சென்னீர்குப்பம், பண்ருட்டி, மேட்டுப்பாளையம், வைப்பூர், எறையூர், செரப்பனஞ்சேரி என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில், கார் தொழிற்சாலை, கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை, மொபைல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை என, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்ல, நூற்றுக்கணக்கான வாகனங்களும், தொழிற்சாலைகளுக்கு கட்டுமானப்பொருட்கள், உதிரிபாகங்களை ஏற்றிச் செல்லவும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம் வழியாக செல்கின்றன. இதனால், இரு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, இரு நெடுஞ்சாலைகளும், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

- ஜெ.ரவி -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி