குப்பை, கழிவு கொட்டும் இடமாக மாறிய பாலாறு... சீரமைக்க நிதியின்றி புலம்பும் நீர்வள அதிகாரிகள்
காஞ்சிபுரம், கட்டடக் கழிவு, குப்பை கொட்டும் இடமாக பாலாறு மாறி, சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. பாலாற்றை சீரமைக்க நிதியின்றி, நீர்வளத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.பாலாற்றின் நடுவே ஆயிரக்கணக்கான மரங்கள் முளைத்து காடு போல மாறி வருகிறது. ஆற்றின் கரைகளில் குப்பை கொட்டுவதும், சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் வாயிலாக குடிநீர் திருட்டும் தொடர்வதால், பாலாற்றின் நிலைமை மோசமானதாக மாறி வருகிறது.கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திதுர்கம் மலையில், பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில், 93 கி.மீ., ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ.,துாரம் பாய்கிறது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 90 கி.மீ., பாய்ந்து, வாயலுாரில் கடலில் கலக்கிறது. விவசாயம்
பாலாற்று பாயும் படுகையின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய் வாயிலாக, 4 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக, பாலாற்றை நம்பி விவசாய பணிகள் நடக்கின்றன.மேலும், ஐந்து கூட்டுக் குடிநீர் திட்டம், பாலாற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.இதன் காரணமாகவே, பெரும்பாக்கம், வெங்குடி, பாலுார் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பாலாற்றின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரும்பாக்கத்தில் துவங்கி, பாலுார் வரை 30 கி.மீ., துாரம் வரை பாலாறு செல்கிறது. இதற்கிடையே, பாலாற்றின் நிலைமை மோசமானதாக உள்ளது.போதிய பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில், குப்பைக் கழிவும், கட்டடக் கழிவும், இஷ்டம் போல பலர் கொட்டி வருகின்றனர். ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில் மேம்பாலம் அருகே குப்பை கொட்டுவதும் தொடர்கிறது.அதேபோல, ஒரு கி.மீ., துாரம் அகலம் கொண்ட பாலாற்றின் இரு கரைப் பகுதிகளிலும், கருவேல மரங்களும், வேலிகாத்தான் உள்ளிட்ட பல வகையான மரங்கள் வேரூன்றி பெரிய அளவில் வளர்ந்து உள்ளன. ஆழ்துளை கிணறு
ஆற்றின் நடுவே காடு போல மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றை நீர்வள ஆதாரத்துறை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக அவற்றை அகற்றாமல் அலட்சியம் காட்டுவதால், மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் முளைக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்படுகின்றன.பாலாற்றின் நடுவே, சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளும் பல இடங்களில் அமைத்து, குடிநீர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. அவற்றை கண்டறிந்து, பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இல்லாததால், இஷ்டம் போல குடிநீர் திருட்டும் நடக்கிறது.பாலாற்றிலிருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, பினாயூர், அரும்புலியூர் கால்வாய்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.கால்வாயின் உண்மையான அகலத்தை கண்டறிய, சர்வே பணிகள் நடந்தன. ஆனால், அப்பணிகளும் தொய்வடைந்ததால், பினாயூர் கால்வாயை முழுமையாக மீட்க முடியாமல் உள்ளன.பாலாற்றையும், நீர்வரத்து கால்வாயையும் பராமரிக்க வேண்டிய நீர்வள ஆதாரத்துறையினர், போதிய நிதி கிடைக்கவில்லை என, புலம்புகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், நீர்நிலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதற்கும் சிரமம் ஏற்படுவதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அரசிடம் ஏரி, ஆறு பராமரிப்பு சம்பந்தமாக நாங்கள் தொடர்ந்து நிதி கேட்கிறோம். அரசு நிதி ஒதுக்கினால் கால்வாய், ஆறு உள்ளிட்டவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை, கட்டடக் கழிவை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.