உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு உட்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு உட்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி

காஞ்சிபுரம்:தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே புற்றுநோய் மருத்துவமனையாக, காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தும் பலர் வந்து சிகிச்சை பெறுகின்றன.தற்போது 290 படுக்கை வசதிகளுடன் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் போதிய கட்டட வசதி இல்லை. இதனால், மருத்துவமனை வளாகத்திலேயே, 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, தரை தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட மிகப்பெரிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பாக, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, 5 அடுக்கு கொண்ட ஒரு லட்சம் சதுரடியிலான பெரிய மருத்துவமனையாக இந்த கட்டடங்களை அமைக்க, தமிழக அரசு கடந்த 2022 ல், உலக வங்கி மூலம் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.கட்டடத்திற்கு மட்டும், 220 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மருத்துவ உபகரணங்கள் வாங்க 33 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டத்தில், காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு மேலும் 120 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.புதிய கட்டடம் கட்டுவதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் என, ஏற்கனவே 250 கோடி ரூபாய் இந்த மருத்துவமனைக்கு நிதி கிடைத்த நிலையில், மேலும் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது, புற்றுநோயால் சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியிலும், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, புற்றுநோய் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது :மருத்துவமனை வளாகத்தில் 5 அடுக்கு கொண்ட ஒரு லட்சம் சதுரடியிலான பெரிய அளவிலான மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடக்கின்றன. கழிவுநீர் மேலாண்மை திட்ட பணிகள் இப்போது நடக்கின்றன. வரும் ஏப்ரலில் முடிந்து, மருத்துவமனை திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்போது கூடுதலாக ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாய் நிதி வாயிலாக, மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வழங்கப்படுகிறது. இதனால், மருத்துவமனையை மேலும் தரமானதாக மாற்ற வழிவகை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !