உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 13ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சியில் 13ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் முனைவர் நீலமேகன், முனைவர் அன்பழகன்ஆகியோர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்ரீ மாயம்மன் கோவில் அருகில் இருந்த சதிகல் சிற்பத்தை கண்டெடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: போரில் உயிர்நீத்த வீரனுக்கு அவனது நினைவாக நடப்படுவது நடுகல். இந்த நடுகல்லில் இறந்த வீரனின் உருவம் இடம் பெற்றிருக்கும். இறந்த வீரனின் மனைவி அவனது இறப்பை தாங்க முடியாமல் அவனுடைய சிதையில் இறங்கி இறக்கும் நிலையில், அவளின் நினைவாக நடப்படுவது சதிகல். செவிலிமேடில் கண்டெடுக்கப்பட்டது சதிகல் வகையை சார்ந்தது. தலையில் கிரீடம் அணிந்துள்ள வீரரின் வலது கையில், போர்வாள் ஒன்றை தரையில் ஊன்றிய நிலையிலும், இடுப்பில் குறுவாள் ஒன்றும் காணப்படுகிறது. பட்டாடை உடுத்தியுள்ள இவரின் கைகள், தோள்கள், காதுகள், கால்கள் மற்றும் மார்பு பகுதிகளில் அணிகலன்களும் காணப்படுகின்றன. இடதுபுறத்தில் நின்றிருக்கும் அவரது மனைவி இடது கை இடுப்பிலும், வலது கை மலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. இடைப்பகுதியில் பட்டாடை அணிந்துள்ள இவரின் கைகள், தோள்கள், காதுகள், கால்கள் மற்றும் மார்பு பகுதிகளில் அணிகலன்களும் காணப்படுகின்றன. எழுத்துக்கள் எதுவுமற்ற இச்சிற்பத்தின் காலம் கி.பி.13ம் நுாற்றாண்டாக இருக்கலாம். இதை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமா சங்கர் உறுதி செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ