உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகத்தீஸ்வரர் கோவில் விவகாரம்: 4 அடி பாதை அமைக்க உத்தரவு

அகத்தீஸ்வரர் கோவில் விவகாரம்: 4 அடி பாதை அமைக்க உத்தரவு

கிளார்:காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர் கோவிலுக்கு பல ஆண்டுகளாக பாதை இல்லாமல் நீடித்த பிரச்னைக்கு, சப் - கலெக்டரின் விசாரணையில், 4 அடி பாதை அமைக்க உத்தரவிட்டார். காஞ்சிபுரம் ஒன்றியம் கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கிளார் கிராமத்தில் வயல்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக பக்தர்கள் பயன்படுத்தி வந்த பாதையை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்களும், சிவனடியார்களும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், கிளார் கிராம ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி ரங்கசாமி, சிவனடியார்கள், கோவில் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து, புகார் மனு அளித்தனர் . இதுகுறித்து காஞ்சி புரம் தாசில்தார் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு, கலெக்டர் கலைசெல்வி உத்தரவிட்டார். தாசில்தார், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேச்சு நடத்தியும், சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலி, இரு தரப்பினரையும் அழைத்து உரிய விசாரணை நடத்தினார். உட்கோட்ட நடுவர் நீதிமன்றத்தில் சப் - கலெக்டர் ஆஷிக் அலி விசாரணை மேற்கொண்டு 4 அடி நிரந்தர பாதையாக அமைத்து தரும்படி தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பின்படி பழைய பாதை மீட்கப்பட்டதையடுத்து சிவனடியார், பக்தர்கள், கிளார் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சப் - கலெக்டர் பிறப்பித்த உத்தரவை உடனே நிறைவேற்றும் வகையில், வருவாய் துறை அதிகாரிகள், கோவிலுக்கு செல்ல 4 அடி பாதை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிளார் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !