உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பையில் கிடந்த கல் துாண்கள் பற்றி தொல்லியல் துறையினர் ஆய்வு

குப்பையில் கிடந்த கல் துாண்கள் பற்றி தொல்லியல் துறையினர் ஆய்வு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 2வது வார்டில் உள்ள பஞ்சுப்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே குப்பை மேட்டில், தொன்மை வாய்ந்த கல் துாண்கள் பல உள்ளதாக, கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், டில்லிபாபு என்பவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். பல்வேறு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கல் துாண்கள், குப்பையில் போடப்பட்டிருப்பதாகவும், போற்றி பாதுகாக்க வேண்டும் என, மனுவில் தெரிவித்திருந்தார். இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்க, காஞ்சிபுரம் சப் - -கலெக்டர் ஆஷிப் அலி, மாநில தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.அதன்படி, சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் கிடக்கும் கல் துாண்கள் பற்றி நேற்று காலை ஆய்வு செய்தனர். பஞ்சுப்பேட்டையில், 300 ஆண்டுகள் பழமையான மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அது பாழடைந்து இடிந்த பின், அந்த துாண்களை பஞ்சுப்பேட்டை குப்பை மேட்டில் போட்டிருப்பதாக, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் சப் - -கலெக்டர் ஆஷிப் அலி கூறியதாவது:கல்துாண்கள் பற்றி கடந்த வாரம் வந்த புகார் மனு தொடர்பாக, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அவர்கள் எனக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய கூறியிருக்கிறேன்.அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அதன் தொன்மை பற்றி தெரியவரும். அதன்பின், அந்த துாண்களை என்ன செய்யலாம் என, முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை