ரூ.68 கோடியில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்... வரப்பிரசாதம்!தினமும் 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க வசதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பத்தில் புதிதாக 68 கோடி ரூபாயில், நத்தப்பேட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால தேவைக்கு, ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர் கழிவுநீரை இங்கு சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாத்திற்குள் பணிகள் முடிவடையும் என, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு, 1975 முதல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு, வணிகம் என, மொத்தம் 21,000 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இதையடுத்து, மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகள் இணைக்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டும், இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதியின்றி இருந்தது. நகரில் சேகரமாகும் கழிவுநீர், சுத்திகரித்த பின் ஏரியில் விடுவதற்கு, திருக்காலிமேடில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், தற்போது பழுதடைந்து செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்ததால், விவசாயம் செய்ய முடியவில்லை என, நத்தப்பேட்டை விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். தவிர, சுகாதாரம் பாதிப்பதும் அதிகரிப்பதால், புதிய கழிவுநீர் நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டது. இந்நிலையில், செவிலிமேடு, நத்தப்பேட்டை, ஓரிக்கை, திருக்காலிமேடு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி 300 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இதனுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதிதாக அமைக்கவும், 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து, நத்தப்பேட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி கடந்தாண்டு தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபரில் பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் தெரிகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: குறைவான இடத்திலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 'சீக்குவல் பேட்ஜ் ரியாக்டர்' எனப்படும் எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பம் வாயிலாக, சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உள்ளது. ஏற்கனவே இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 120 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வந்தது. புதிதாக அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம், எதிர்காலத்தையும் கருதி, 360 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்வதற்கான திறனில் அமைக்கப்படுகிறது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில், இந்த தொழில்நுட்பம் வாயிலாக தான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு சுற்றிலும் கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன. மேலும், பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் அங்கு பொருத்தப்பட உள்ளன. செவிலிமேடு, ஓரிக்கை போன்ற இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் வந்துவிட்டதால், மாநகராட்சி முழுதும் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டியிருக்கும். அதனாலேயே, ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் இந்த நிலையம் கட்டமைக்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரித்து கிடைக்கும் தண்ணீரை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். தேவைப்பட்டால், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. பெரும்பாலும், தொழிற்சாலைக்கு வழங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், 60 சதவீதம் முடிந்துள்ளது. வரும் செப்., அல்லது அக்., மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். எஸ்.பி.ஆர்.,தொழில்நுட்பம் என்பதால், நல்ல பலனை இது கொடுக்கும். பழைய சுத்திகரிப்பு நிலையம் இடித்து அகற்றப்படும்,'' என்றார். எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பத்தால் கழிவுநீர் சுத்திகரிப்பது எப்படி? எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பம் என்பது, கழிவுநீரை சுத்திகரிக்கும் ஒரு மேம்பட்ட உயிரியல் சுத்திகரிப்பு முறை. இதில் ஒரே தொட்டியில் கழிவுநீர் சேகரிப்பு, காற்றேற்றம், சுத்திகரிப்பு மற்றும் தெளிந்த நீர் வெளியேற்றம் ஆகிய அனைத்து செயல்முறைகளும் வரிசையாக நடக்கும். தமிழகத்தில் நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறைவான இடத்தில் இந்த கழிவுநீர் நிலையத்தை கட்டமைக்க முடியும். வெளியேறும் நீரின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். தனித்தனி தொட்டிகள் தேவையில்லை. அதற்கு எப்போதும் மின்சார பயன்பாடு இருக்க வேண்டும் என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.