சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வழிகாட்டி பலகையின்றி புகார்தாரர்கள் சிரமம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாகம் பின்புறம் செயல்படும், சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வழிகாட்டி பலகை இல்லாததால், புகார் அளிக்க வருவோர், பலரிடம் வழி கேட்டு சிரமப்படுகின்றனர். 'ஆன்லைன்' மோசடியில் பணத்தை இழந்தவர்கள், மொபைல்போன் செயலி மூலம் பணத்தை இழந்தவர்கள், இணையதளம் சம்பந்தமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்படைந்தவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான புகார்கள் வந்தபடியே உள்ளன. அவ்வாறு, புகார் அளிக்க காஞ்சிபுரத்திற்கு வருவோருக்கு, சைபர் கிரைம் காவல் நிலையம் எங்கு உள்ளது என, தெரியாமல் அவதிப்படுகின்றனர். கலெக்டர் வளாகத்திற்கு வரும் புகார்தாரர்கள் எந்த கட்டடத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்படுகிறது என, தெரியாமல் பலரிடம் வழி கேட்கின்றனர். கலெக்டர் வளாகத்தின் வெளியே, உள்ளே என எந்த இடத்திலும் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வழிகாட்டி பலகை இல்லை. எனவே காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தின், முதல் மாடியில் சைபர் கிரைம் காவல் நிலையம் இயங்குவதாக தெளிவான வழிகாட்டி பலகை பல இடங்களில் வைக்க புகார்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.