வட்ட ரயில் சேவையை மீண்டும் துவக்க நுகர்வோர் சங்கம் பிரதமருக்கு மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திற்கு மீண்டும் வட்டப்பாதை ரயில் சேவையை துவக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க, காஞ்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனு விபரம்: செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே அமைந்துள்ள காஞ்சிபுரம் ரயில் வழித்தடம் முக்கியமான ரயில் பாதையாக இருந்து வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக தென்சென்னை பகுதிகளுக்கு சென்று வர காஞ்சிபுரம்- - சென்னை கடற்கரை ரயில் சேவையை காஞ்சி புரம் மற்றும் சுற்றிவட்டார மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வட சென்னை பகுதிக்கு செல்ல காஞ்சிபுரத்தில் இருந்து நேரடியான புறநகர் ரயில் சேவை இல்லை. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை பூங்கா அல்லது கோட்டை வரை ரயிலில் பயணித்து, அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்று, வட சென்னை பகுதிகளுக்கு வேறு புறநகர் ரயில் மூலம் சென்று வருகின்றனர். இதனால் பயணியருக்கு நேர விரயமும் பண விரயமும் ஏற்பட்டு வருகிறது. 2018ல், சென்னை கடற்கரை- தாம்பரம்,- செங்கல்பட்டு, காஞ்சிபுரம்- அரக்கோணம்,- திருவள்ளூர்,- பெரம்பூர் மீண்டும் சென்னை கடற்கரை வழியாக இரண்டு வட்டப்பாதை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பலருக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், 2020ம் ஆண்டு, 'கொரோனா' தொற்று ஊரடங்கு காரணமாக வட்டப்பாதை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பயணியர் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, 2020ல் நிறுத்தப்பட்ட வட்டப்பாதை ரயில்களை மீண்டும் துவக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.