கட்டணமில்லா பயண அட்டை பயன்படுத்த ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டையை பயன்படுத்த ஜூன் 30 வரை என, 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.பயனாளிகள் இந்த திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமும் இன்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு இ - சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாக மேலும், இவ்வசதியை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 கோட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 2025 மார்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டையை, ஜூன் 30ம் தேதி வரை என, 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.இந்த பயண அட்டையை கொண்டு, அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது என, தெரிவித்துள்ளார்.