குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு பணி சுறுசுறுப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கச்சேரி, காவாம்பயிர், நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு, செய்யாற்று படுகையில் இருந்து ஆழ்துளை கிணறு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதேபோல, பாலாற்று படுகையில் இருந்து, ஆழ்துளை கிணறு வாயிலாக திருமுக்கூடல், சிறுதாமூர், பினாயூர் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய, பாலாற்று படுகையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு குடிநீர் கிணறு, கோடைக்கால வறட்சியால் வற்றின.இதனால், அந்த கிராமத்திற்கு முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க, திருமுக்கூடல் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், பாலாற்று படுகையின் மையப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, நேற்று முதல் மும்முரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து, திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது:பாலாற்று படுகையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஆழ்துளை கிணறுகள் வற்றி உள்ளன. இதனால், குடியிருப்புகளுக்கு முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.எனவே, பாலாற்று படுகையின் மையப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.