உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பு நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை

ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பு நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் ஷேர் ஆட்டோக்கள் கட்டணம் அதிகமாக வசூலிப்பதால், நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என, நகர மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்த காஞ்சிபுரம் நகர்ப்பகுதி, கடந்த 2021 ல், தமிழக அரசு மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. மாகநராட்சியாக தரம் உயரும் முன்னரும், இப்போதும் 64 சதுர கி.மீ., பரப்பளவில் காஞ்சிபுரம் நகர்ப்பகுதி உள்ளது. மேலும், கோனேரிக்குப்பம், ஏனாத்துார், சிறுகாவேரிப்பாக்கம், கீழ்கதிர்பூர், கருப்படித்தட்டடை என சில ஊராட்சிகளை இணைத்து, மாகநகராட்சியின் பரப்பளவு மேலும் விரிவாக்கம் செய்ய எதிர்கால திட்டம் அரசிடம் உள்ளது. மாநகராட்சியாக மாறிய பின்னரும், நகரின் சில அடிப்படை வசதிகள் நகர மக்களுக்கு இன்னும் கிடைக்காமலேயே உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக, நகர பேருந்து சேவை இன்னும் துவங்காமல் இருப்பது, நகர்ப்பகுதிவாசிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நகர பேருந்து சேவை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் இயக்கப்படுகிறது. நகருக்குள்ளேயே இயக்கப்படும் மாநகர பேருந்துகளால், குறைந்த கட்டணத்தில், பயணியர் செல்ல முடியும். அதுபோன்ற பேருந்து சேவை, காஞ்சிபுரத்தில் துவங்க வேண்டும் என, பல ஆண்டுகளாகவே நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதுபோன்ற எந்த திட்டமும் போக்குவரத்து கழகத்தில் இதுவரை இல்லை. காஞ்சிபுரத்தின் அனைத்து பகுதியிலும் இயங்கும் ேஷர் ஆட்டோவில், எந்த பகுதியில் ஏறி இறங்கினாலும், குறைந்தபட்சம் 20 ரூபாய் வசூலிக்கின்றனர். ஆட்டோவில் ஏறி குறைவான துாரத்தில் இறங்கினாலும் 20 ரூபாய் வசூலிக்கின்றனர். சாமானிய மக்களுக்கு இந்த கட்டணம் அதிகம். நகர பேருந்துகளில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மிக குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால், அந்த சேவையை எதிர்பார்க்கின்றனர். ஓரிக்கையில் இருந்து ஒலிமுகமதுபேட்டைக்கும், செவிலிமேட்டில் இருந்து புதிய ரயில்வே நிலையத்துக்கும், நத்தபேட்டையில் இருந்து பிள்ளையார்பாளையம் பகுதிக்கும் நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !