மேலும் செய்திகள்
அவளூர் ஏரிக்கு பாலாறு நீர்வரத்து துவக்கம்
27-Oct-2025
உத்திரமேரூர்: பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், நீர்வரத்து கால்வாய் மேடாக இருப்பதால், சாத்தணஞ்சேரி ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தில், நீர்வளத் துறைக்கு சொந்தமான, 120 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி அப்பகுதியின், 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஏரி துார் வாராமலும், நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமலும் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் குறைவான அளவே ஏரியில் தண்ணீர் சேகரமாகி வருகிறது. இதுகுறித்து, சாத்தணஞ்சேரி விவசாயிகள் கூறியதாவது: சாத்தணஞ்சேரி ஏரிக்கு பினாயூர் பாலாறில் இருந்து நீர்வரத்து கால்வாய் வருகிறது. இந்த நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஐந்து ஆண்டுகளாக, சாத்தணஞ்சேரி ஏரி நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் வராமல் உள்ளது. பினாயூரில் பாலாறில் இருந்து நீர்வரத்து கால்வாய் பிரியும் இடத்தில், பாலாறு தாழ்வாகவும் நீர்வரத்து கால்வாய் மேடாகவும் உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சாத்தணஞ்சேரி ஏரி நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பாலாறின் மட்டத்திற்கு நீர்வரத்து கால்வாய் மட்டத்தை சீரமைக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சீரமைத்தால் ஆண்டுதோறும் பருவ மழை நேரங்களில், ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பினாயூர் பாலாறில், சாத்தனஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் பிரியும் இடத்தில், ஆறு தாழ்வாகவும் நீர்வரத்து கால்வாய் மேடாகவும் உள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஆற்றின் மட்டத்திற்கு நீர்வரத்து கால்வாய் மட்டத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
27-Oct-2025