பெருமாள் கோவில் குளம் மோசம் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.இக்கோவிலில், 2 கோடி ரூபாய்க்கு மேல், பல்வேறு திருப்பணி செய்யப்பட்டு, கடந்த பிப்., 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.இக்கோவில் வளாகத்தில் கஜேந்திரபுஷ்கரணி என அழைக்கப்படும் தெப்பகுளம் உள்ளது. கும்பாபிஷேகத்தின்போது, துார்வாரி சீரமைக்கப்பட்ட இக்குளத்தை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளத்தில் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. மேலும், செடி, கொடிகள் மண்டி குளம் சீரழிந்து வருகிறது. இக்குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாய், சில இடங்களில் துார்ந்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், கடந்த வாரம் 'பெஞ்சல்' புயலின்போது பெய்த மழையின்போது குளம் பாதியளவு கூட நிரம்பவில்லை.எனவே, அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும்.மேலும், குளத்தில் தேங்கியுள்ள பாசி படர்ந்த நீரை முழுமையாக அகற்றிவிட்டு, குளத்தை சீரமைக்க கோவில் அறங்காவலர் குழுவினரும், ஹிந்து அறநிலையத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.