குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி கிராமத்திற்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் குழாய், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலையோரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு உள்ளது.இந்த குழாய் பல்வேறு இடங்களில் அழுத்தம் தாங்காமல், உடைந்து குடிநீர் வீணாகி வந்தது.இதை தவிர்க்க, கருவேப்பம்பூண்டி பகுதியில் கேட் வால்வு அமைக்கப்பட்டு, குழாய் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.இந்த குழாய் வாயிலாக அப்பகுதியினர் குடிநீர் பிடித்து செல்கின்றனர்.தற்போது, இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.தற்போது, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, உடைந்த குழாயை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.