ராட்சத டைனோசர் பொம்மை சாய்ந்து உத்திரமேரூர் பூங்கா சுற்றுச்சுவர் சேதம்
உத்திரமேரூர்: -உத்திரமேரூரில், சிறுவர் பூங்காவில் ராட்சத டைனோசர் பொம்மை சாய்ந்து, சுற்றுச்சுவர் சேதமடைந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, 4-வது வார்டில் காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை அப்பகுதி சிறுவர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்த நிலையிலும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் இருந்தன. கடந்த 20 நாட்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகத்தினர், 6 லட்சம் செலவில், சிறுவர் பூங்காவை புதுப்பித்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில், பூங்காவில் இருந்த ராட்சத டைனோசர் பொம்மை திடீரென்று சாய்ந்து சுற்றுச்சுவர் சேதமடைந்தது. டைனோசர் பொம்மை சாய்ந்த நேரத்தில் பூங்காவில் சிறுவர்கள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சாய்ந்த ராட்சத டைனோசர் பொம்மையை சீரமைக்கும் பணியில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.