தங்கப்பல்லி தரிசனம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு மூலையில் கச்சிவாய்த்தான் மண்டபத்திற்கு அருகில் உள்ள தங்கப்பல்லியை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு பல்லி முதலான தோஷம் நீங்கும்.கொங்கண தேசத்தில் ச்ருங்கிபேரர் என்பவருக்கு ஹேமன், சுக்லன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கவுதம முனிவரிடம் வேதம் படித்தனர். குருகுல முறைப்படி தினமும் குரு கவுதமரின் பூஜைக்கு தேவையான நீரையும், யாகத்துக்கு தேவையான குச்சிகளையும் சேகரித்து வருவது இவர்கள் பணி. ஒருநாள் இருவரும் குரு முன் வைத்த தீர்த்த குடத்திலிருந்து, இரண்டு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியேறின. இதை கண்ட கவுதமர் அருவருப்படைந்தார்.சீடர்களின் பொறுப்பற்ற செயலுக்காக கோபம் கொண்டார். அவர்களை பல்லிகளாக மாறும்படி சபித்தார். சாபத்தால் பயந்த சீடர்கள் குருவிடம் சாப விமோசனம் கோரினர்.நாம் செய்யும் ஒரு நற்செயலுக்கு ஆயிரம் மடங்கு பலன் தரும் சத்திய விரதம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் சென்று அத்திகிரி மலையில் கோவில் கொண்டுள்ள அருளாளப் பெருமாளான வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். விரைவில், அவர் உங்களுக்கு சாப விமோசனம் அளிப்பார் என, கவுதம முனிவர் கூறினார்.சாப விமோசனம் பெற்ற சீடர்களின் நினைவாக தங்கம், வெள்ளியில் ஆன பல்லி உருவங்களை வரதராஜ பெருமாள் கோவிலில், இந்திரன் பிரதிஷ்டை செய்தார்.இவற்றை தொட்டு வணங்குபவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கும். செல்வம் பெருகும். நோய்கள் தீரும். என, இந்திரன் அருள்பாலித்தார்.இன்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பல்லி தரிசனம் செய்கின்றனர்.