லிப்ட் வசதி இல்லாத அரசு அலுவலகங்கள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லாததால், படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்கள் செயல்படுகின்றன. இந்த கட்டடங்களில், அன்றாடம் மக்கள் நேரடியாக சென்று அரசு அதிகாரிகளை சந்திப்பதும், விண்ணப்பம் செய்வதும், கோரிக்கை மனுக்களை அளிப்பது போன்றவை மேற்கொள்கின்றனர். அரசு கட்டடங்கள் பல, இரண்டு அடுக்கு கட்டடங்களாகவும், சில இடங்களில் மூன்று அடுக்கு கட்டடங்களாகவும் உள்ளன. இந்த கட்டடங்களில் லிப்ட் வசதி இல்லாததால், முதல், இரண்டாம் தளங்களில் உள்ள அதிகாரிகளை, படியில் ஏறி சென்று சந்திப்பதில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என பலரும் சிரமப்படுகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு அலுவலகங்களில் கூட லிப்ட் இல்லாதது, முதியோர் உள்ளிட்டோருக்கு படிக்கட்டு ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், மாவட்ட அளவிலான தலைமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் தவிர மற்ற எந்த அலுவலகங்களிலும் லிப்ட் வசதி கிடையாது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி கமிஷனர் அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் என, மக்கள் நேரடியாக அன்றாடம் செல்லும் இந்த அலுவலகங்களில் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.