காஞ்சியில் காட்சிப்பொருளாக மாறிய வழிகாட்டி தெரு பெயர் பலகைகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களில், சேதமடைந்த நிலையில் உள்ள வழிகாட்டி தெரு பெயர் பலகைகளை அகற்றிவிட்டு, புதிய பெயர் பலகை அமைக்க வேண்டும் என, நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. காஞ்சிபுரம் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்தபோது, பொதுமக்கள், தெருக்களின் பெயர்களை அறியும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன், வார்டு எண், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தெரு பெயர் பலகைகளை, உரிய முறையில் பராமரிக்காததால், பெரும்பாலான இடங்களில் பெயர் பலகைகள் சேதம் அடைந்து, எழுத்துக்கள் அழிந்த நிலையில் உள்ளன. சில இடங்களில் பெயர் பலகை மாயமாகி, இரும்பு சட்டங்கள் மட்டும் காட்சி பொருளாக உள்ளன. இதனால், பல்வேறு பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வரும் பொதுமக்கள், தெருக்கள் பெயர் தெரியாமல் அலைகின்றனர். இதனால், வெளியூர் வாசிகள் மட்டுமின்றி, உள்ளூர் வாசிகளும் தெருக்களின் பெயர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பல தெருக்களிலும், புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளிலும், பெயர் பலகை அமைக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியில் உள்ள வார்டுகள் மறுவரையறை செய்தபோது, வார்டு எண்களும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், தற்போது உள்ள வழிகாட்டி பெயர் பலகையில், வார்டு எண் தவறாக உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளிலும், சேதமடைந்த நிலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகையை அகற்றிவிட்டு, புதிய வார்டு எண்களுடன் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.